Home  |  திரை உலகம்

ஒரு கடன்காரனைப் போல கூச்சப்பட்டு ஒதுங்கிப் போனேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி நெகிழ்ச்சி

     சென்னை, என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆகையால் தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

     சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.

     பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

     இப்போதெல்லாம் நான் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய் விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள் தான். எதிரியே கிடையாது. எனக்கு நான் மட்டும் தான் எதிரி.

     ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும் வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எல்லா விஷயத்திலும் அப்படித்தான்.

     மற்றொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும் வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

     நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர முடியாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.

     நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வர முடியாதே என்று வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு, என்று கூறினேன். ‘உங்களுக்கு அழைப்பிதழ் தருவது எனது கடமை, விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும் என்றார்.

     எனக்கு இரவு முழுவதும் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருப்பது சரியில்ல, என்று முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன்.

     நான் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் மிகவும் வருத்தத்தோடு திரும்பினார்.

     ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். I'm Sorry Kamal,  நான் சென்னை வந்ததும் நானே உங்களை வந்து பார்க்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.

     கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்து அல்ல, லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.

     என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.

     காரணம் அவர்களிடம் ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் பூரண குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.

     நல்ல படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல் தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

     இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.

     சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.

     சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.

     ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார், ”நீ புத்திசாலிடா... உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்”னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்.” என்றார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்