Home  |  திரை உலகம்

கே.பாலசந்தர் வரலாற்று நினைவலைகள்...

கே.பாலசந்தர் வரலாற்று நினைவலைகள்...

இயக்குனர் சிகரம் என ரசிகர்களால், அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர் பல அசாதாரண சாதனைகளை நம்மிடையே விட்டு சென்றுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். சிறுவயதிலேயே மேடை நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதியும் இருக்கிறார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படிப்பில் சேர்ந்து படித்தவர், தொடர்ந்து மேடை நாடகக் கலையுடன் தொடர்பிலேயே இருந்தார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

பிறகு சென்னைக்கு வந்து, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக்குழுவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு நாடகக்குழுவை ஏற்படுத்தினார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நவக்ரஹம் போன்ற நாடகங்களை அவரே தயாரித்து இயக்கினார்.

எம்.ஜி.ஆர்தான் பாலச்சந்தரை திரையுலகுக்கு அழைத்து வந்தார். அவர் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பைத் தந்தார். அந்தச் சமயத்தில், அவர் பணியாற்றிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வந்தது. இதற்கிடையே இவரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏ.வி.எம் செட்டியார், அதை கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குநர்களைக்கொண்டு நாகேஷை ஹீரோவாக நடிக்கவைத்து தயாரித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இவரின் இன்னொரு நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்' இந்தியில் படமாக எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்றது.

1965-ல் 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல் என தன் நாடகங்களையே படமாக எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய ‘பாமா விஜயம்' இவரை டிரெண்ட் செட்டர் இயக்குநர் ஆக்கியது.

இவரின் ‘இருகோடுகள்' சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ‘அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவன் இல்லை...' என இவர் இயக்கிய படங்கள் விமர்சனம், வியாபாரம், சர்ச்சை என ஏதோ ஒருவகையில் மக்களிடம் சென்றடைந்துகொண்டே இருந்தது. ‘

ஏக் துஜே கே லியே' இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது. இவரின் படங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததாலும், அவை பெரும்பாலும் சமூக அரசியல் விஷயங்களையே மையப்படுத்தியவையாக அமைந்தன. இந்தியப் பெண்களின் நிலை, அவர்களின் பரிதாப நிலைகளை இவரின் படங்கள் பேசின. அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், கல்யாண அகதிகள், மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களில் கேபியின் பெண் பாத்திரங்கள் சமூகப் புரட்சியாளர்களாகப் பார்க்கப்பட்டனர்.

சிந்து பைரவியை இசைச் சித்திரமாகத் தந்த அவர், உன்னால் முடியும் தம்பியை சமூக அரசியல் மாற்றத்துக்கான வித்தாகப் படைத்தார். இந்த நாட்டின் அரசியலை அவரைப் போல நய்யாண்டி செய்து படமெடுத்தவர்கள் யாருமில்லை. தண்ணீர் தண்ணீரும் அச்சமில்லை அச்சமில்லையும் அரசியல் எள்ளலின் உச்சம்.

‘பார்த்தாலே பரவசம்' இவரின் 100-வது படம். ‘பொய்' கே.பி இயக்கிய 101-வது படம். அதோடு சினிமா இயக்குவதை நிறுத்திக்கொண்டாலும் சினிமா ரசிகராக இளைய தலைமுறைக் கலைஞர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்தத் தவறியதில்லை. சின்னத் திரையிலும் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை நிகழ்த்தினார். இவரின் முதல் தொலைக்காட்சி தொடர் 'ரயில் சிநேகம்.' 1990-ல் தூர்தர்ஷனுக்குகாக எடுத்தார். ‘கையளவு மனசு' இவரின் முத்திரை சீரியல். மெகா சீரியல் என்ற வழக்கத்தை ‘ரகுவம்சம்' மூலம் துவக்கி வைத்தார்.

இவர் தமிழ் சினிமாவில் 65-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ரஜினிகாந்த், கமலஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் அதில் பிரபல ஆளுமைகள்!

இந்திய சினிமாவின் முக்கியத் தூணாகத் திகழ்ந்த கேபிக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கி, அந்த விருதுக்கு அர்த்தம் தேடிக் கொண்டது. தன் கடைசி காலத்தில், மீண்டும் ஒரு நாடகம் நடத்த வேண்டும் என விரும்பினார் கேபி. அதில் தன் சீடர்கள் ரஜினி, கமல் நடிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். அதேபோல ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதும் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகிவிட்டது.

  24 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்