Home  |  ஆன்மிகம்

கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 !!

கிறித்துமசு  அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது கிறித்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் துவக்க நாளாகும்.

 

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். 

 

கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாரா பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

 

கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7 ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று. 

 

கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்

 

இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும். மார்ச் 25 தற்பொழுது மங்கள வார்த்தை அறிவிப்பின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

 

மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும் கருதப்படுவதால் ஆதாம் படைக்கப்பட்ட நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

 

ஆரம்ப கிறிஸ்தவர்கள் மார்ச் 25ஆம் நாளே இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கருதினார்கள். இதன் உள்கருத்து இயேசு கருவில் உருவாகிய அதே நாளில் இறத்தல் என்பதாகும்; இது, தீர்க்கதரிசி (இறைவாக்கினர்) ஒருவர் முழு எண்ணளவான நாட்களே உயிர் வாழ்வாரென்ற யூதர்களது நம்பிக்கையின் காரணமாக எழுந்ததாகும். தொடக்க கால கிறிஸ்தவ அவையில் இயேசுவின் பிறந்த நாள் திருநாளாகக் கொண்டாடப்படவில்லை. கி.பி.245ஆம் ஆண்டு ஒரிஜென் என்ற கிறிஸ்தவ இறையியல் அறிஞர் இயேசுவின் பிறப்பை கொண்டாடுவதை பலமாக எதிர்த்தார். அவர் பார்வோனனரசரைப் போல இயேசுவின் பிறப்பை கொண்டாடக்கூடாது எனவும் பாவிகளே அவ்வாறு செய்வதாகவும் புனிதர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டார். ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

 

கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப்பழைமையான குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் உரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினராயினும் இயேசுவின் திருமுழுக்குக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.. 

 

இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி 6 கிறிஸ்து பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டது; இன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை இறைக்காட்சி விழா என்று அழைக்கிறது.

 

கிழக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரிய சார்பான பேரரசன் வலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு தந்தை, மகன், தூய ஆவி என்று ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் புதுப்பிக்கப்பட்டது. கொன்சாந்தினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

 எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம்  மிகுந்து காணப்பட்ட கொன்சாந்தினொபிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கி.பி 381 இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்றப்பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

கொண்டாட்டங்கள் :

 

டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு,மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.விண்மீன்க்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர்.

 

வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்.

பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் இசைப்பார்கள்.

கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!