Home  |  ஆரோக்கியம்

ஆயுர்வேதம் சொல்லும் சரியான உணவு எது ?

மனிதன் இன்று உடலுக்கு நன்மை தரும் உணவை மறந்து விட்டு பாஸ்ட் புட் போன்ற இடங்களில் கொரித்துக் கொண்டு அங்கே திரையில் காண்பிக்கப்படும் சினிமாவை பார்த்து சிரித்துக் கொண்டே சாப்பிடுகிறான். திருமண வைபவங்களில் பஃவே ஸிஸ்டம் என்ற பெயரில் தட்டை கையில் வைத்து வேக வைக்காத வெங்காயம் கேரட் பச்சை மிளகாய், எலுமிச்சை, வெள்ளரி, தக்காளி போன்றவைகளுடன் வேகவைத்த பொருள்களை கலந்து விவேகமற்று உண்ணும் நிலையைக் காண்கிறோம். இளைஞர்கள் குளிர்பானங்கள் , சிப்ஸ் மற்றும் கடைகளில் விற்கப்படும் லாஹிரி வஸ்துக்கள், ஊறுகாய் போன்ற விரைவில் உயிரைக் கொல்லும் பதார்த்தங்களை ருசித்த வாய் துர்நாற்றத்துடன் சாலைகளில் நடந்து செல்கிறார்கள். நமது தேசத்தின் எதிர்காலம் நிச்சயமாக இது போன்ற இளைஞர்கள் கையில் இல்லை. இவர்களால் தேசம் அழியுமே தவிர வளர்ச்சிக்காள பாதை என்ன என்பதே இவர்களுக்கு மூளையின் மழுங்கலால் தெரியாமற் போய்விடும். அரசாங்கம் இவ்விஷயத்தில் நம்மை முட்டாளாக்கி விட்டது.

ஒன்றோ இரண்டோ தலைமுறைக்கு பின்னோக்கிச் சென்றால் உணவின் மகத்துவம் உணர்ந்து திடகாத்திரத்துடன் நீண்ட ஆயுளை நம் முன்னோர் பெற்றிருந்தனர். உணவின் மூலம் அவர்கள் பெற்றிருந்த தூய சிந்தனை, செயலில் சிரத்தை, சுறுசுறுப்பு ஆகியவை மூலம் நாடு அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை இக்கால இளைஞர்களும் யுவதிகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வாய்க்கும் ஒய்வு தேவை என்ற எண்ணத்தை கொண்டிருந்த முன் சந்ததியினர் காலை, மாலை ஆகிய இரண்டு காலங்களில் மட்டுமே சத்தான உணவை உட்கொண்டனர். அதிலும் தேசம் அதாவது தாம் வாழ்ந்த சூழ்நிலை, பண்பு, கலாச்சாரம், நிலத்தின் தன்மை ஆகியவற்றிற்க்கு உகந்த வகையில் உணவை ஏற்றனர். தண்ணிர் குறைந்தும் வெப்பமும் காற்றும் அதிகமாக உள்ள ஜாங்கல தேசத்தை சேர்ந்த மனிதர்கள் இனிப்பு, புளிப்பு அதிகமானதும் நெய்ப்பு சத்து அதிகமுள்ள நெய், பால், வெண்ணெய் போன்ற உணவுகளை சாப்பிட்ட உடலில் வாயு தோஷத்தின் சீற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். தண்ணீர் நிறைந்ததும், மழை அதிகமாக உள்ள ஆநூப தேசத்தைச் சேர்ந்த மனிதர்கள் கசப்பு, உவர்ப்பு, காரம் போன்ற சுவைகளுடன் வறட்சியான உணவால் கபத்தை கிளறாதபடி உணவை அமைத்துக் கொண்டனர்.

 தண்ணீர் அதிகமில்லை, வெப்பமும் அதிகமில்லை என்ற சாதாரண தேசத்தில் வாழ்ந்த மக்கள் எல்லா சுவைகளுமுள்ள ஆகாரங்களை கலந்தே சாப்பிட்டனர்.
பருவ நிலைகளுக்குத் தகுந்தவாறு உணவை அமைத்துக் கொண்டனர். நல்ல வெயிற்காலத்தில் உடல் பலம் குறைந்து, தண்ணீரை அதிகம் குடிப்பதால் பசி மந்தித்து விடுகிறது. அதனால் அதிக சத்துள்ள உணவு எளிதில் ஜீர்ணமாகும் வகையில் தயார் செய்து சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட்டனர். காரம், புளி, உப்பு குறைத்து, இனிப்பு அதிக அளவில் சாப்பிட்டதால் உடல் போஷாக்கு குறையாமல் பார்த்துக் கொண்டனர். மழைக் காலத்தில் பழைய அரிசி, கோதுமை, தேன் போன்றவை சேர்த்து காரத்தையும் அதிகம் உட்கொண்டனர். நெய்ப்பு தரும் பதார்த்தங்களைக் குறைத்தனர். குளிர் காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்பு,கோதுமை, கரும்புச் சாறு, எண்ணெய்ப் பசை உடைய பலகாரங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உடல் நலத்தைப் பாதுகாத்தனர். உணவை திரவம் மற்றும் கடினம் என்று இருவகையாகப் பிரித்தனர். பால், தயிர், நெய், தேன் போன்றவை திரவம். ஆட்டுப்பால் மிகவும் விசேஷமாக திரவ உணவில் சேர்த்தனர். கடின உணவில் சத்தான கைகுத்தலரிசி, பழைய கோதுமை, சோளம், கேழ்வரகு போன்றவை அதிக அளவில் இடம் பெற்றன. பசித்தீயின் தன்மைக்கு ஏற்ப இவைகளில் சரியான அளவில் சேர்த்து பயனடைந்தனர்.நாம் உண்ணும் உணவு உடல்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கும் மட்டுமல்ல. மனவளர்ச்சிக்கும் புத்திவளர்ச்சிக்கும் கூட என்பதை அறிந்து உணவை சாத்வீகம், ராஜஸம் மற்றும் தாமஸம் என்ற வகையில் பிரித்தனர்.

வாழ்நாட்களை அதிகப்படுத்துவதும், தேகம் மற்றும் புத்தி வளர்ச்சிக்கு உகந்ததும், இனிப்பும், மனதிற்கு திருப்தி அளிப்பதுமான உணவு சாத்விக உணவு. சூடான பருப்பு சாதத்தில் நெய்விட்டு பிசைந்து, மோர் குழம்புடன் சாப்பிடுவது இவ்வகையைச் சாரும். கசப்பு, புளிப்பு, உப்பு, காரம், வறட்சி, சூடு, வியாதியை தரக்கூடிய இக்காலத்திய chips, பட்டை சோம்பு மசாலா வகைகள், வெங்காயம், பூண்டு,  காராபூந்தி போன்ற வகையறாக்கள் ராஜஸ உணவாகும். வேகாமல் பச்சையாகவும், ருசியற்றதும், அழுகியும், சமைத்துப் பல நாட்களானதுமான உணவு தாமஸ வகை உணவு. சாத்விக உணவைத் தவிர மற்றவை தவிர்த்தல் நலம் தரும்.இத்தனை விஷயங்களை மட்டும் கவனித்ததோடு நில்லாமல் உணவை சாப்பிடும் நேரத்தில் மலமூத்திரங்களை கழித்து, மனதை சாந்தமாக வைத்து, நல்ல பசி எடுத்த பிறகு, உணவில் சிரத்தையுடன் உட்கொண்டதால் அவர்கள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்றிருந்தனர். இன்று கண்டதை கண்ட இடத்தில் சாப்பிடும் வழக்கத்தை மனிதன் மாற்றி நம் முன்னோர் வாழ்ந்த முறையை அனுசரிக்க வேண்டும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!